சத்தீஷ்காரில் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2024-12-13 06:53 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்டத்தின் நேந்திரா மற்றும் புன்னூர் கிராமங்களின் வனபகுதியை சுற்றி வளைத்து இன்று காலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 12 ரைபிள் மற்றும் மாவோயிஸ்டுகள் தொடர்பான பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தின் தெற்கு அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, இதுவரை 217 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்