மாஹே பிராந்தியத்தில் செப்.25 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு: புதுச்சேரி அரசு
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குறைந்ததையொட்டி, மாஹேவில் செப்.25 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஹே,
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் அதன் எல்லைப்பகுதியில் இருக்கும் புதுவையின் மாஹே பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன், பொதுமக்களுக்கும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கேரள மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது என்றும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில்,கேரளாவில் நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்.25 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.