பள்ளி பஸ்-டிராக்டர் மோதல்; 50 மாணவர்கள் படுகாயம்
தாவணகெரேயில் பள்ளி பஸ்-டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது இதில் 50 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு;
தாவணகெரே (மாவட்டம்) டவுன் குந்துவாடா பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி பஸ்சில் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது தாவணகெரே தேசிய நெடுஞ்சாலையில் குந்துவாடா பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டரும், பள்ளி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பள்ளி பஸ் சாலையோர தடுப்பில் மோதி ஏறி நின்றது.
டிராக்டர் டிராலி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் வந்த 2 பேரும், பள்ளி பஸ்சில் வந்த 50 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் படுகாயமடைந்த 52 பேரையும் மீட்டு போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.