குழந்தை கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்டு

குழந்தை கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை கேட்டுள்ளது.

Update: 2024-09-29 00:20 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

குழந்தைகள் கடத்தலை தடுக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. அம்மனுக்கள், நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. குழந்தைகள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட பல்வேறு நபர்களுக்கு ஐகோர்ட்டுகள் வழங்கிய ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "குழந்தை கடத்தலின் தீவிரத்தன்மையை உணராமல் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதால், ஜாமீனை ரத்து செய்கிறோம். கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் காணாமல் போனதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? அவற்றில் அடுத்த 4 மாதங்களுக்குள் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டன? எத்தனை பேரை இன்னும் மீட்கவில்லை? அவர்களை மீட்கவும், குழந்தைகள் கடத்தலை தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இந்த கேள்விகளுக்கான பதிலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்