சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ஆண்டர்சன்பேட்டையில் சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
கோலார் தங்கவயல்
கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் ராபர்ட்சன்பேட்டை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாைலயோரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
மேலும் ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள், இறைச்சி கழிவுகளை சாலையோரம் வீசி செல்கிறார்கள்.
இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. அந்த வழியாக செல்பவா்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கிறார்கள். மேலும் அங்கு இறைச்சி கழிவுகளை சாப்பிட நாய்கள் கூட்டமாக நிற்பதால், அந்த வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.
தூய்மை பணியாளர்களும் இந்த இறைச்சி கழிவுகளை அகற்றுவதில்லை. மேலும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்பவர்கள் மீதும் நகரசபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நகரசபை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நகரசபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.