வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு

ஹாசனில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளனர்.

Update: 2023-06-22 21:42 GMT

ஹாசன்:

ஹாசனில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

ஹாசன் மாவட்டம் சன்னராயப்பட்டணா தாலுகா வலகெரே கிராமத்தை அடுத்த சோமேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபா. இவர் கடந்த ஆண்டு ராமேஸ்வரா படாவனேவில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் ஷோபா கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வலகெரே கிராமத்திற்கு சென்றிருந்தார். மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

சந்தேகம் அடைந்த அவர் வீட்டினுள் சென்று பீரோவை சோதனை செய்தார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள், பணம் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷோபா உடனே ஹாசன் நகர போலீசாருக்கு தகவல் அளித்தார்.

ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் திருட்டு நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை சென்றுவிட்டு பின்னர் திரும்பிவிட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டு நடந்திருப்பதால், மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் 230 கிராம் மதிப்பிலான தங்க வைர நகைகள், 190 கிராம வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், பணத்தை திருடி சென்றிருப்பதாக தெரியவந்தது. மொத்தம் திருடுபோன நகை, பணத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஷோபா கொடுத்த புகாரின் பேரில் ஹாசன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்