புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ.40 லட்சம் பறிமுதல் - வாலிபர் கைது

புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் ரூ.40 லட்சம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-30 23:07 GMT

திருவனந்தபுரம்,

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் குமரி மாவட்டம் வழியாக அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பஸ் மூலம் கேரளாவுக்கு பணம் கடத்தப்பட்டு வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாறசாலை அருகே உள்ள கொற்றாமம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தமிழ்நாடு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் இருந்த ஒரு வாலிபரின் செயல்பாடு போலீசாருக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தது. அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை எடுத்து போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துடன், அந்த வாலிபரை பாறசாலை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்தவாலிபர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது37) என்பது தெரிய வந்தது. மேலும், பணத்தை அவர் புதுச்சேரியில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். அந்த பையில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்த போது அதில் ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? யாருக்காக கொண்டு வந்தார், அது ஹவாலா பணமா? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்