ஆன்லைன் சூதாட்டம் மூலம் நடந்த மோசடியில் ரூ.212 கோடி பறிமுதல் - மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி தகவல்

ஆன்லைன் சூதாட்டம் மூலம் நடந்த மோசடியில் ரூ.212 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-21 15:56 GMT

புதுடெல்லி,

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்து கூறியதாவது:-

இணைய குற்றங்கள், கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான முறைகேடு உள்பட பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இதற்காக சில சூதாட்ட வலைதளங்கள், செயலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கடந்த 16ம் தேதி நிலவரப்படி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.212 கோடியே 91 லட்சத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையேயான பணிக் குழு (ஐஎம்டிஎஃப்) அமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டணத்தின் அடிப்படையிலா அல்லது பந்தயத் தொகையையும் சேர்த்து கணக்கிட்டு வரி விதிப்பதா என்பது குறித்து ஆராய அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்திருந்தது. அந்தக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்