ரவுடி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு; போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்

மங்களூரு அருகே ரவுடி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-07-17 14:37 GMT

மங்களூரு;

ரவுடி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜே போலீஸ் எல்லைக்குட்பட்ட அசகோலி பகுதியை சேர்ந்தவர் முக்தார். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

தலைமறைவாக இருந்த ரவுடி முக்தாரை, போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்தாரை, கோனஜே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கு சம்பந்தமாகவும் மற்றும் குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்திய பொருட்கள், வாகனங்களை மீட்க அதனை அடையாளம் காண்பிக்கும்படி உல்லால் போலீசார், ரவுடி முக்தாரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதாவது போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தீப், போலீசார் அக்பர் மற்றும் வாசு ஆகியோர், முக்தாரை அழைத்து சென்றனர்.

தப்பிக்க முயற்சி

அப்போது செல்லும் வழியில் திடீரென முக்தார், போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பிக்க ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் விரட்டி சென்று முக்தாரை பிடிக்க முயன்றனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சந்தீப் சரணடைந்துவிடும்படியும், இல்லையேல் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக கூறி வான்நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ரவுடி முக்தார் ஓடியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்தீப், முக்தாரின் காலில் குறிவைத்து ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் காலில் குண்டு துளைத்ததில் முக்தார் சுருண்டு கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அதேபோல் ரவுடி முக்தார் தாக்கியதில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் சந்தீப் மற்றும் போலீசார் அக்பர் மற்றும் வாசு ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ரவுடி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்