மங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தும்பே அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் மங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உ ள்ளது.

Update: 2023-05-11 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் வாழும் மக்களுக்கு அங்குள்ள தும்பே அணையில் இருந்து தான் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தும்பே அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி மங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தும்பே அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் மங்களூரு வடக்கு மற்றும் மங்களூரு தெற்கு பகுதி என தண்ணீர் சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்படுகிறது.

தும்பே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை ஏதும் பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளுக்கு டேங்கர்கள் மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதால் ஏரி, குளங்களில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது' என்று கூறினர்.

இதற்கிடையே முல்கி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் அப்பகுதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்