சகோதரர் மனைவியை எதிர்த்து போட்டியிட தயார்

ஜனார்த்தன ரெட்டியால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தேன் என்றும், சகோதரர் மனைவியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-02 20:10 GMT

பெங்களூரு:-

ஜனார்த்தன ரெட்டி மனைவி...

முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியை தொடங்கி உள்ளார். கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், கொப்பல், பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜனார்த்தன ரெட்டி பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பல்லாரி தொகுதியில், தன்னுடைய அண்ணன் சோமசேகர் ரெட்டிக்கு எதிராக மனைவி அருணா லட்சுமி போட்டியிடுவார் என்று ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார்.

சோமசேகர் ரெட்டி தற்போது பா.ஜனதா கட்சியில் இருந்து வருகிறார். பல்லாரி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு அவர் எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், புதிய கட்சி தொடங்கி உள்ள ஜனார்த்தன ரெட்டி, சகோதரருக்கு எதிராக மனைவியை வேட்பாளராக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்லாரியில் நேற்று சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

போட்டியிட தயார்

எனது சகோதரர் ஜனார்த்தன ரெட்டிக்கு, என்னை போன்று தியாக மனபான்மை கிடையாது. அவருக்காக நான் 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்து இருந்தேன். அதனை ஜனார்த்தன ரெட்டி மறந்துவிட்டார். அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. பல்லாரி தொகுதியில் எனக்கு எதிராக, அருணா லட்சுமி போட்டியிடுவார் என்று ஜனார்த்தன ரெட்டி அறிவித்திருக்கிறார். பல்லாரியில் நூறு சதவீதம் நான் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா கட்சி சார்பிலேயே பல்லாரியில் போட்டியிடுவேன். பல்லாரியின் வளர்ச்சியே முக்கியம்.

சில தொண்டர்கள் புதிய கட்சி என்பதால், அங்கு சென்றிருக்கலாம். பா.ஜனதா தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கின்றனர். அருணா லட்சுமி போட்டியிடுவதால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. காங்கிரசுக்கு தான் நஷ்டம். அதற்கான அருணா லட்சுமி என்னை எதிர்த்து போட்டியிடுவது தவறு என்றும் சொல்லவில்லை. பல்லாரியில் நான் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர் மனைவியை எதிர்த்து போட்டியிட தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்