ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகை தாக்கல்
குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்துல் மதீன் டஹா மற்றும் முசவீர் ஹசன் ஆகிய 2 பேரை கடந்த மாதம் 12ம் தேதி மேற்குவங்காளத்தில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில், மாஸ் முனீர், அப்துல் மதீன் தாஹா, முசாவிர், முஸாமில் ஷெரீப், சோயிப் மிர்சா ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடிப்பை நடத்தியவர் கர்னல் என்ற குறியீட்டு பெயரில் வெளிநாட்டில் இருந்து சதித்திட்டத்தை தீட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.