எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவின் தயார் நிலை பற்றி ராஜ்நாத் சிங் ஆய்வு

காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவின் தயார் நிலை பற்றி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

Update: 2022-06-16 14:56 GMT



ஜம்மு,



நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ராணுவ வீரர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடுகிறார். நாளை நடைபெற உள்ள மகாராஜா குலாப் சிங்கின் 200வது ஆண்டு முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதற்காக காஷ்மீர் சென்ற அவர் பாராமுல்லா பகுதியில் உள்ள வீரர்களுக்கான நினைவகத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

அதன்பின், பராகானா பகுதிக்கு செல்வதற்காக, மலை பிரதேசம் உள்ளிட்ட அனைத்து நிலையிலான தரை பகுதிகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட ராணுவ வாகனம் ஒன்றை பாராமுல்லா நகரில் இருந்து அவரே ஓட்டி சென்றார்.

அதற்கு முன், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ராஜ்நாத் சிங் அவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் இன்று மதிய உணவு சாப்பிட்டார்.

தொடர்ந்து அவர், காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்த ராணுவ நிலைகளில் ஒன்றிற்கு சென்றார். அதில் இருந்தபடி, இந்தியாவின் தயார் நிலை பற்றி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஆய்வுப்பணியை மேற்கொண்டார். அவருக்கு ராணுவ உயரதிகாரி, வேண்டிய விளக்கங்களை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்