ராஜேந்திர பாலாஜி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திர பாலாஜி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
கடந்த ஜனவரி 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போலீஸ் நிலைய எல்லையை தாண்டி பயணிக்க கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தக்கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் கடந்த மார்ச் 7-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி அவரது சார்பில் வக்கீல்கள் சித்தாந்த் பட்நாகர், ஏ.வேலன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஹீமாகோலி ஆகியோர் அடங்கிய கோடைகால அமர்வு முன் முறையிட்டனர்.
இந்த முறையீட்டை நீதிபதிகள் நிராகரித்ததுடன், கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் பரிசீலித்தது. இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கிறது.