நாடாளுமன்றத்திற்குள் ஒழுகிய மழைநீர் - மக்களவை செயலகம் விளக்கம்

நாடாளுமன்றத்திற்குள் மழைநீர் ஒழுகியது தொடர்பாக மக்களவை செயலகம் விளக்கமளித்துள்ளது.

Update: 2024-08-01 12:12 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 27-ந்தேதி பெய்த கனமழையின்போது அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இந்த சம்பவத்தில் அங்கு படித்து வந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அதன் பின்னர் சற்று மழை தணிந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதனிடையே நேற்று பெய்த கனமழையால், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகியது. மழைநீர் ஒழுகிய இடத்தில் பக்கெட் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்குள் மழைநீர் ஒழுகியது தொடர்பாக மக்களவை செயலகம் விளக்கமளித்துள்ளது. அதில், "புதிய நாடாளுமன்றத்தில் இயற்கை ஒளியை பயன்படுத்த லாபி உள்ளிட்ட பல பகுதிகளில் கண்ணாடி குவிமாடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று பெய்த கனமழையில் கண்ணாடி குவிமாடங்களை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பிசின் பொருள் விலகியதால் நீர்க்கசிவு ஏற்பட்டது. உடனடியாக இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில், மழைநீர் கசிவு நின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்