ராகுல் காந்தி செய்த செயலுக்கு விளைவுகளை சந்திக்க நேரிடும் - பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத்
ராகுல் காந்தி செய்த செயலுக்கு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.;
புதுடெல்லி,
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாஜக ஆட்சி குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் வெட்கக்கேடான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை கூறுகிறார். ராகுல் காந்தியின் பாட்டியும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திதான் எமர்ஜென்சியை விதித்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தார். மக்கள் உங்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் போது நீங்கள் ஏன் ஜனநாயகத்தை குறை கூறுகிறீர்கள்? உங்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறதா?
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. இரண்டு காந்திகளுக்கு 76 சதவீத பங்குகள் உள்ள யங் இந்தியன் நிறுவனம் எப்படி ரூ.5,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள நேசனல் ஹெரால்டு சொத்துக்களை வெறும் ரூ.5 லட்சம் முதலீட்டில் வாங்கியது என்பது குறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய நீதித்துறை மறுத்துவிட்டது. இப்போது அவர் விசாரணை அமைப்புகளை குற்றம் சாட்டுகிறார். ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என்று சாக்குபோக்கு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.