இந்த முறை மணிப்பூர் முதல் மும்பை வரை... ஜனவரி 14ல் மீண்டும் யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

இந்த யாத்திரையானது முதலில் நடைபெற்றதுபோன்று முழுக்க முழுக்க பாத யாத்திரையாக இருக்காது.

Update: 2023-12-27 06:06 GMT

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். இந்திய ஒற்றுமை பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. கட்சிக்கு மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளித்தது.

இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை ஜனவரி 14ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார். மணிப்பூரில் நடைபெறும் துவக்க நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு, யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த யாத்திரைக்கு பாரத் நியாய் யாத்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த யாத்திரை அமைய உள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 6,200 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த யாத்திரையானது முதலில் நடைபெற்றதுபோன்று முழுக்க முழுக்க பாத யாத்திரையாக இருக்காது. அதிக அளவில் மக்களை சந்திக்கும் நோக்கத்துடன், யாத்திரையின் பெரும்பகுதி பேருந்து பயணமாகவே இருக்கும். பேரணி உள்ளிட்ட ஒரு சில நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் மட்டும் நடைபயணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்