பெங்களூருவில் பஸ்சில் பயணம் செய்து மக்களை கவர்ந்த ராகுல்காந்தி...!

பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார்.

Update: 2023-05-08 09:34 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் தலைவர்கள் இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நிறைவு பெற்றதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்கள்.

குறிப்பாக ஆளும் பா.ஜனதாவினர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதுபோல் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. 6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வாக்காளர்களை கவர்வதற்காக பல பல யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார். பெங்களூருவின் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.

அங்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். பின்னர், அவர்களோடு பேருந்திலும் பயணித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவச பேருந்து சேவை குறித்தும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்தும் எடுத்துக் கூறினார். அப்போது, பேருந்து பயணங்களில் தங்களுக்கு இருக்கும் சிரமங்கள் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் அவரிடம் பெண்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, லிங்கராஜபுரம் என்ற பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். இந்த பயணத்தின்போது ராகுல் காந்தியோடு பயணித்த சக பயணிகள், அவரோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்