2024-25 ஆண்டுக்கான ரபி பருவ கோதுமை கொள்முதலுக்கான இலக்கு 32 மில்லியன் டன்களாக நிர்ணயம்

டெல்லியில், மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தலைமையிலான மாநில உணவுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான இலக்கு முடிவு செய்யப்பட்டது.;

Update:2024-02-29 13:24 IST

புதுடெல்லி,

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை உள்ளிட்டவற்றை ஒவ்வோர் ஆண்டும் அரசு கொள்முதல் செய்யும். இதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்படும். எனினும், விளைச்சலுக்கேற்ப அரசின் கொள்முதலில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும்.

இதன்படி, நடப்பு 2024-25 ஆண்டுக்கான ரபி பருவத்திற்கான கோதுமை கொள்முதல் ஆனது 30 முதல் 32 மில்லியன் டன்களாக இருக்கும் என மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

2023-24 ஆண்டுக்கான (ஜூலை முதல் ஜூன் வரை) கோதுமை விளைச்சலானது 114-115 மில்லியன் டன்களாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும், குறைந்த அளவிலான இலக்கு இந்த முறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில், உணவுத் துறைச் செயலர்  சஞ்சீவ் சோப்ரா தலைமையிலான மாநில உணவுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான இலக்கு முடிவு செய்யப்பட்டது.

இதுதவிர, நெல் கொள்முதலுக்கு 9 முதல் 10 மில்லியன் டன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ரபி பருவத்திற்கான தானிய கொள்முதல் 6 லட்சம் டன்களாக இருக்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

உணவு முறையில் ஊட்டச்சத்து மேம்பாடு மற்றும் பலவகை பயிர்களை பரவலாக்கும் நோக்குடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தானிய கொள்முதலில் கவனம் செலுத்தும்படி, கூட்டத்தில் மத்திய அரசு கேட்டு கொண்டது.

2023-24 பருவத்தில், 34.15 மில்லியன் டன்கள் என்ற இலக்கிற்கு எதிராக 26.2 மில்லியன் டன்கள் கோதுமையையே அரசு கொள்முதல் செய்திருந்தது.

இது, 2022-23 ஆண்டில் 44.4 மில்லியன் டன்கள் என்ற இலக்கு இருந்தபோதும், 18.8 மில்லியன் டன்கள் கோதுமையே கொள்முதல் செய்யப்பட்டது. உற்பத்தி குறைவால் மிக குறைந்த அளவில் கொள்முதல் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்