ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன், விப்ரோ ஊழியர் வாக்குவாதம்-பரபரப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன், விப்ரோ ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

விப்ரோ ஊழியர் வாக்குவாதம்

பெங்களூருவில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2.4 மீட்டர் சுற்றுச்சுவரை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.

அப்போது சுற்றுச்சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து விப்ரோ நிறுவன ஊழியர் ஒருவர், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது அந்த ஊழியர் ஆங்கிலத்தில் பேசி கொண்டே இருந்தார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் உங்களுடன் ஆங்கிலத்தில் பேச வரவில்லை. ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வந்து உள்ளோம் என்று கூறினர்.

சுற்றுச்சுவர் இடிப்பு

அப்போது மீண்டும் அந்த ஊழியர் நான் ஆங்கிலத்தின் தான் பேசுவேன் என்று கூறி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது. பின்னர் அந்த ஊழியரை சக ஊழியர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இதையடுத்து விப்ரோ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கசவனஹள்ளி பகுதியில் ஒரு கொட்டகையையும், பாகமனே டெக் பார்க் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாக்கடை கால்வாய் சிலாப்புகளும் அகற்றப்பட்டன. மேலும் மாரத்தஹள்ளி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. இன்றும் (புதன்கிழமை) ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்