'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம்: உத்தரபிரதேசம், பீகாரில் நீடிக்கும் வன்முறை

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

Update: 2022-06-19 02:00 GMT

Image Courtacy: PTI

லக்னோ,

'அக்னிபத்' என்ற பெயரில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. திட்டத்தை உடனடியாக திரும்பப்பெறுமாறு மத்திய அரசையும் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம் அக்னிபத் திட்டம் நாடு முழுவதும் வேலை தேடும் இளைஞர்களிடம், குறிப்பாக முப்படையில் சேர்வதற்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

4-வது நாளாக வன்முறை

எனவே இந்த திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பல மாநிலங்களில் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த வன்முறை சம்பவங்கள் நேற்று 4-வது நாளாக நீடித்தது. உத்தரபிரதேசம், பீகாரின் பல மாவட்டங்களில் தீ வைப்பு, கல்வீச்சு சம்பவங்களால் பெருத்த சேதம் ஏற்பட்டது.

அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் சாலைகளில் பேரணியாக சென்றனர். அப்போது வழியில் காணும் வாகனங்களை சேதப்படுத்தினர்.

ஜான்பூர்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பஸ்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். லாலா பஜாரில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மகராஜ்கஞ்ச் பகுதியில் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சுக்லா உள்பட ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.

வன்முறையில் இறங்கிய சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் ஐ.ஜி. தெரிவித்தார்.

சண்டாலி மாவட்டத்தில் குச்மேன் ரெயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

மிர்சாபூர் மாவட்டத்தின் டாகர் பகுதியில் அரசு பஸ் மீது வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கினர். பின்னர் ரெயில் நிலையம் நோக்கி படையெடுத்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைப்போல பதான் ரெயில் நிலையம் ஒன்றில் போராட்டத்துக்கு முயன்ற இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

இவ்வாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் நீடித்த வன்முறை சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வன்முறையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சேதம் அடைந்த சொத்துகளுக்கான இழப்பீட்டை அவர்களிடம் இருந்தே வசூலிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

பீகாரிலும் வன்முறை

இதற்கிடையே அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பீகாரில் நேற்று முழு அடைப்புக்கு (பந்த்) போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன.

இந்த முழு அடைப்பையொட்டி மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை மூண்டது. குறிப்பாக தலைநகர் பாட்னாவின் புறநகரில் அமைந்துள்ள தரகனா ரெயில் நிலையத்துக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தினர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மீது கல்வீசி தாக்கிய அவர்கள், இதை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

தனாபூரில் ஆம்புலன்ஸ் ஒன்றை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், உள்ளே இருந்த நோயாளி மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியரையும் தாக்கினர்.

இணையதள சேவை துண்டிப்பு

பாட்னாவில் பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கே திறந்திருந்த கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எனினும் சாலைகளில் தண்டால் எடுத்தும், வர்த்தக நிறுவனங்கள் மீது கற்களை வீசியும் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக ஜெகனாபாத் மாவட்டத்தில் போலீஸ் சோதனைச்சாவடி ஒன்றை போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில் சில போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

மங்கர் பகுதியில் சாலைகளில் டயர்களை கொளுத்தி போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து மாநிலத்தில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் தொடர்வதால் பல இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறையால் பீகாரில் தொடர்ந்து பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

கர்நாடகாவில் போலீஸ் தடியடி

இதைப்போல கர்நாடகாவின் தார்வாரில் ஏராளமான இளைஞர்கள் கூடி அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதைப்போல பெலகாவி மாவட்டத்தின் நிப்பானி தாலுகா அலுவலகம் முன் ஏராளமான இளைஞர்கள் கூடி தண்டால் எடுத்து போராட்டம் நடத்தினர். மேலும் கானாபுராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஞ்சலி நம்பால்கர் தலைமையில் போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்