கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவு

கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-06-27 02:44 IST

பெங்களூரு:

கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாடு

கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிரியங்க் கார்கே பேசியதாவது:-

கர்நாடகத்தில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமாக பெய்ய தொடங்கவில்லை. 16 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் தட்சிண கன்னடா, குடகு, சிவமொக்கா, உத்தர கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துவிட்டது. கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கூறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிர நடவடிக்கை

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால் தண்ணீர் பிரச்சினை ஓரளவுக்கு தீர்ந்து வருகிறது. டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நிதி அளிக்கப்படும். நிதி பற்றாக்குறை இருந்தால் அதுகுறித்து அதிகாரிகள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

24 மாவட்டங்களில் 424 கிராமங்களுக்கு 365 டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 431 தனியார் ஆழ்குழாய் கிணறுகளை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தண்ணீர் வினியோகம் செய்கிறது. மொத்தத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்