பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி விடுவிப்பு

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதிைய பிரதமர் மோடி விடுவித்தார்.

Update: 2022-10-18 00:43 GMT

புதுடெல்லி,

தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் 'பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம்' கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு தடவை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணம், சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்தநிலையில், இத்திட்டத்தின் 12-வது தவணை தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் பிரதமர் விவசாயிகள் கவுரவ மாநாட்டில் நடைபெற்றது.

பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 12-வது தவணை நிதியுதவியை விடுவித்தார். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி நிதியை அவர் விடுவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், தீபாவளி பரிசாக இந்த பணம் கிடைத்துள்ளது.

இத்துடன், இதுவரை மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கோடி நிதி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் இருந்து 13 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 1,500 வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்