திருவாவடுதுறை ஆதினத்திடம் செங்கோலை பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பங்கேற்றுள்ளனர்
புதுடெல்லி,
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது. டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். டெல்லியில் நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றடைந்தனர்.
இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பான் பங்கேற்றுள்ளனர். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , மத்திய இணைமந்திரி எல்.முருகன் உடனிருந்தனர்.