கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி பெரிய அளவில் பங்களிப்பு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி பெரிய அளவில் பங்களிப்பு அளிக்கிறார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-11-11 18:45 GMT

தேவனஹள்ளி:

பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

பொன் எழுத்துக்கள்

பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு 2 பரிசுகளை வழங்கியுள்ளார். வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் மற்றும் அதிநவீன 2-வது முனையம் ஆகும். ஏற்கனவே புறநகர் ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடலோர மாவட்டங்களில் துறைமுகங்கள் மேம்பாடு உள்பட கர்நாடகத்தின் வளா்ச்சிக்கு பிரதமர் மோடி பெரிய அளவில் பங்களிப்பு வழங்கி வருகிறார்.

கெம்பேகவுடா தத்துவங்களின் அடிப்படையில் செயல்பட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். கர்நாடகத்தின் வளர்ச்சியில் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய தினம். இன்று(நேற்று) கனகதாசர் ஜெயந்தி. அதையொட்டி கனகதாசர் சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். வால்மீகி சிலைக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.

மிகப்பெரிய விமான நிலையம்

மைசூரு, பெங்களூரு, சென்னையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்துள்ளார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன 2-வது முனையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு விமான நிலையம் நாட்டின் 2-வது மிகப்பெரிய விமான நிலையமாக மாறியுள்ளது. இந்த திட்டங்களை வழங்கிய பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

விஜயநகர் பேரரசு இருந்தபோது கெம்பேகவுடா, பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். கெம்பேகவுடா அன்று தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டதால் இன்று உலக அளவில் பெங்களூரு சிறந்து விளங்குகிறது. நகரை திட்டமிட்டு வளர்த்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். ஏரிகள் உள்பட நீர் நிலைகளை உருவாக்கினார்.

நவீன இந்தியா

இதன் மூலம் மக்கள் நிம்மதியாக வாழ அவர் நடவடிக்கை எடுத்தார். குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை இருப்பது போல் பெங்களூருவில் கெம்பேகவுடா சிலை உள்ளது. நவீன இந்தியாவின் விகாச மனிதர் மோடி. நாட்டின் பல்வேறு சவால்களை தீர்த்து வலுவான இந்தியாவை உருவாக்க மோடி பாடுபட்டு வருகிறார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறார். உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களால் இந்தியாவுக்கு அத்தகைய இக்கட்டான நிலை ஏற்படவில்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்