காற்றுமாசு அதிகரிப்பு எதிரொலி டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் இன்று முதல் மூடப்படும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, டெல்லியில், தொடக்கப்பள்ளிகள் இன்று முதல் மூடப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2022-11-04 21:15 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாயிகள், விவசாய கழிவு பொருட்களை தீவைத்து எரிப்பதால், டெல்லியில் காற்றுமாசு அபாய அளவை கடந்து விட்டது.

இந்தநிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் நேற்று டெல்லியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து இருப்பதால், தொடக்கப்பள்ளிகள் 5-ந் தேதி (இன்று) முதல் மூடப்படும். 5-ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வெளிப்புற விளையாட்டு செயல்பாடுகள், காற்றின் தரம் அதிகரிக்கும்வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன.

காற்று மாசு காரணமாக, டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களை ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்குவதை அமல்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

பஞ்சாபில் விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பது உண்மைதான். அதற்கு விவசாயிகள் பொறுப்பல்ல. நாங்கள்தான் பொறுப்பு. எங்களுக்கு 6 மாத கால அவகாசம்தான் கிடைத்தது. இருப்பினும், தொடர் நடவடிக்கைகள் மூலமாக அடுத்த ஆண்டுக்குள் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் கணிசமாக குறையும் என்று நம்புகிறோம்.

மத்திய அரசு முன்வர வேண்டும்

காற்று மாசு என்பது வடஇந்தியா முழுவதற்குமான பிரச்சினை. ெடல்லியை போலவே, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், அரியானா ஆகிய மாநிலங்களிலும் காற்று மாசு மோசமாக உள்ளது. எனவே, இதற்கு ஆம் ஆத்மி மட்டும் பொறுப்பல்ல. மத்திய அரசு முன்வந்து கூட்டாக ஆலோசனை நடத்தி, கூட்டு நடவடிக்கைகள் எடுத்தால்தான், வடஇந்தியாவை காற்று மாசில் இருந்து காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி புறநகர்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில், 8-ம்வகுப்புவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு நேற்று முன்தினம் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, டெல்லி சுற்றுச்சூழல்துறை மந்திரி கோபால் ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

7-ந் தேதி முதல், டெல்லி அரசு ஊழியர்களில் 50 சதவீதம்பேர், வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். தனியார் அலுவலகங்களும் இதை பின்பற்றுமாறு அறிவுரை வெளியிடப்படும்.

பள்ளிகளில் உயர்வகுப்பு மாணவர்களின் வெளிப்புற செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளுமாறு பள்ளிகளை கேட்டுக்கொள்வோம். பொது போக்குவரத்தை அதிகரிக்கும்வகையில், சி.என்.ஜி.யில் இயங்கும் 500 தனியார் பஸ்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்துவதை கண்காணிக்க 6 உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்