குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை; கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.;

Update:2022-07-20 20:35 IST

மங்களூரு;

குரங்கு அம்மை நோய்

இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் அடியெடுத்து வைத்துள்ளது. அதாவது ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தான், இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கி கேரளாவுக்கு சென்ற மற்றொருவரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குரங்கு அம்மை நோய் பீதி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க கர்நாடக அரசும், சுகாதாரத்துறையும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பஜ்பே சர்வதேச விமானநிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டம் முடிந்து அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


முன்எச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில், குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். எனவே, தட்சிண கன்னடா மாவட்டத்தில் குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து மங்களூருவுக்கு விமான மூலம் வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அதில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்களை, உடனே வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதற்காக வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஷ், மங்களூரு விமான நிலைய தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் டாடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்