குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் உலகளவில் 63 நாடுகளில் குரங்கம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுவதே குரங்கம்மையின் அறிகுறி. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை எளிதாக தாக்குகிறது. குரங்கம்மை நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் கை இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குரங்கு அம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.