பா.ஜனதா பிரமுகர் பிரவீன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு, ஷோபா கடிதம்
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு, ஷோபா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 32). பா.ஜனதா பிரமுகரான இவரை கடந்த 26-ந் தேதி இரவு மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய விவசாயத்துறை மந்திரி ஷோபா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், பிரவீன் நெட்டார் கொலை வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. அமைப்புகள் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகளை அரங்கேற்றி வருகின்றன என்று கூறியுள்ளார்.