சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சிவமொக்கா அருகே திருமணத்திற்கு காதலி மறுத்ததால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுவிட்டு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-06-27 15:27 GMT

சிவமொக்கா;

காதல்

சிவமொக்கா மாவட்டம் சொரப் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், பெங்களூருவில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதேபோல் அதேநிறுவனத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயை சேர்ந்த திலீப் என்ற வாலிபரும் வேலை பார்த்தார். அப்போது திலீப்புக்கு,இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறியும், தனியாக அடிக்கடி சந்தித்து பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையே இளம்பெண், வேலையைவிட்டு விட்டு சொந்த ஊரான சொரப்பிற்கு சென்றுவிட்டார்.

திருமணத்திற்கு மறுப்பு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளம்பெண், திலீப்பை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதைதொடர்ந்து தீலிப், இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தீலிப் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும் தற்கொலை செய்யவும் முடிவு செய்துள்ளார்.

அதன்படி நேற்றுமுன்தினம் திலீப், காதலியின் ஊரான சொரப்பிற்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள ஏரிக்கரையில் அமர்ந்து செல்போனில் வீடியோ எடுத்தபடி விஷ மருந்தை காண்பித்து அதனை குடித்து தற்கொலை செய்யப்போவதாகவும், எனது சாவுக்கு காதலி தான் காரணம் என்று கூறி பதிவு செய்த வீடியோவை காதலி மற்றும் தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

தற்கொலை

இதைதொடர்ந்து அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், திலீப்பை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி திலீப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஆனவட்டி போலீசார் விரைந்து சென்று திலீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு காதலி மறுப்பு தெரிவித்ததால் திலீப் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனவட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் திலீப் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்