நாடு முழுவதும் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு
நாட்டின் பல மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் மாநில போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
தமிழ்நாடு, கேரளா உள்பட 15 மாநிலங்களில் 93 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சோதனையின் முடிவில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கேரளாவில் 22 பேரும், தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் இன்று 2-வது முறையாக ரெய்டு நடைபெற்று வருகிறது. மாநில போலீசார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, மராட்டியம், தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் மாநில போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஷாகின்பாக், ஜாமியா, நிசாமுதின் உள்பட பல பகுதிகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், கர்நாடகாவில் பிஎப்ஐ நிர்வாகிகள் 40 பேரும், பிஎப்ஐ அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ நிர்வாகிகள் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமில் பிஎப்ஐ நிர்வாகிகள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் என்ஐஏ கடந்த சில நாட்களுக்கு முன் ரெய்டு நடத்திய நிலையில் இன்று மாநில போலீசார் ரெய்டு நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.