இந்தியாவின் சிறந்த சகாப்தம் வரப்போகிறது: அனைத்துப் பிரிவினருடனும் கட்சி தொண்டர்கள் இணைய வேண்டும் - பிரதமர் மோடி

நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-17 18:11 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன.

இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கிவிட்டது. இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநாகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் ஜனவரி 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பாஜகவின் செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் வரும் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ், "பாஜக இனி ஒரு அரசியல் இயக்கம் அல்ல.. சமூகப் பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கம். இந்தியாவுக்கு இதுதான் மிகச் சிறந்த நேரம். இதை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளை நாம் அமிர்த காலம் என கூறி வருகிறோம். இதனை நாம் கடமைக்கான காலமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சி அபிரிமிதமானதாக இருக்கும். 18-25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தியாவின் அரசியல் வரலாற்றை உணரவில்லை. முந்தைய அரசாங்கங்களில் நடந்த "ஊழல் மற்றும் தவறான செயல்கள்" பற்றி அவர்களுக்குத் தெரியாது.

தற்போதைய அரசின் செயல்பாட்டால் நாடு எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகிறது என்பது குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு நம்மோடு இணைக்க வேண்டும். வாக்கு வங்கிக்காக இதைச் செய்யக்கூடாது. அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும் எனும் நோக்கில் இது இருக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்