டெல்லியில் மெகா பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்பு; மலர்தூவி உற்சாக வரவேற்பு
டெல்லியில் நாடாளுமன்ற சாலை வரையிலான மெகா பேரணியில் இன்று பங்கேற்ற பிரதமர் மோடிக்கு மலர்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் கட்சி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பேரணி நாளை நடைபெற இருந்த நிலையில், இன்றைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதன்படி, இன்று மதியம் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரை பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, டெல்லியின் சில பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட கூடும் என்பதற்காக, வாகனங்கள் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற பின்பு டெல்லியில் நடைபெறும் அக்கட்சியின் முதல் மிக பெரிய கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு, குஜராத்தில் பிரதமர் மோடி 5 மணிநேரம் கொண்ட 50 கி.மீ. தொலைவை கடந்து சென்று மெகா பேரணியை நடத்தினார்.
இந்நிலையில், டெல்லி போலீசார் விடுத்த அறிக்கையில், பா.ஜ.க. பேரணியை முன்னிட்டு, அசோகா சாலை, சன்சாத் மார்க், டால்ஸ்டாய் சாலை, ரபி மார்க், ஜந்தர் மந்தர் சாலை, இம்தியாஸ் கான் மார்க் மற்றும் பங்க்ளா சாஹிப் லேன் பகுதியில் இன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த பகுதிகளில் சாலைகள் மூடப்படுகின்றன.
வாகன போக்குவரத்து ஆனது, கோல் தக் கானா, குருத்வாரா ரகப் கஞ்ச், வின்ட்சார், ரெயில் பவன், அவுட்டர் சி.சி.-சன்சாத் மார்க் சந்திப்பு, ரெய்சினா சாலை-ஜந்தர் மந்தர் சாலை சந்திப்பு, ஜன்பாத்-டால்ஸ்டாய் சாலை சந்திப்பு மற்றும் டால்ஸ்டாய் சாலை கே.ஜி. மார்க் சந்திப்பு பகுதிகளுக்கு திருப்பி விடப்படுகிறது என தெரிவித்து இருந்தது.
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் வர இருக்கிற சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.
இந்த தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, பா.ஜ.க. தலைமையகத்தில் கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநில அமைப்பு தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்கள் அடங்கிய கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, டெல்லியில் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரையிலான மெகா பேரணியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.
அவரை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. கட்சி தொண்டர்களும் குவிந்திருந்தனர். பிரதமர் மோடிக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வாகனத்தில் நின்றபடியே பயணம் செய்து, மக்களை நோக்கி கையசைத்தபடியே சென்றார்.
இதன்பின்பு, புதுடெல்லி நகராட்சி கவுன்சில் கூட்ட அரங்கிற்கு சென்ற அவரை பா.ஜ.க. தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர்.