ஓட்டுக்காக இலவசங்களை வழங்கும் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள் - பிரதமர் மோடி

உ.பி.யில் அமைக்கப்பட்டுள்ள 296 கி.மீ. நீள விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இலவசங்களை வழங்கி ஓட்டு கோரும் கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

Update: 2022-07-16 20:04 GMT

பந்தல்கண்ட் விரைவுசாலை திறப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 மாவட்டங்கள் வழியாக 296 கி.மீ. தொலைவுக்கு 'பந்தல்கண்ட்' விரைவுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ரூ.14 ஆயிரத்து 850 கோடி செலவில், 28 மாதங்களில் உருவாகியுள்ளது.

ஜலான் மாவட்டம், கைதேரி கிராமத்தில், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி, இந்த விரைவுசாலையை திறந்து வைத்தார்.

எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

இந்த பூமி எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி ஆகும். நாட்டுக்காக அவர்களது உழைப்பு ரத்தமாக வழிந்தோடி இருக்கிறது. இந்த மண்ணின் மகன்கள், மகள்களின் வீரமும், கடின உழைப்பும் நாட்டின் பெயரை எப்போதும் ஒளிரச்செய்திருக்கிறது.

இந்த பந்தல்கண்ட் விரைவு சாலையால் சித்ரகூட்டில் இருந்து டெல்லிக்கான பயணம் 3 அல்லது 4 மணி நேரம் குறையும். இதை விட கூடுதலான பலன்கள் கிடைக்கும். இந்த விரைவுசாலை வாகனங்களுக்கு வேகம் தருவது மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த பந்தல்கண்ட் பகுதியின் தொழில் துறை முன்னேற்றத்தை முடுக்கி விடும்.

இரட்டை என்ஜின் அரசு

தற்போது இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள், அதிவேக அடிப்படையிலான இணைப்பு வசதிகளுடன்உறுதி செய்யப்படுகின்றன.

நாட்டின் வளர்ச்சிப்பாதை இப்போது அதன் மையத்தில் நோக்கம், மரியாதை என இரண்டு அம்சங்களில் நகர்கிறது. நாங்கள் நிகழ்காலத்துக்கான வசதிகளை மட்டுமே ஏற்படுத்தவில்லை. நாட்டின் எதிர்காலத்துக்காகவும் கட்டமைத்து வருகிறோம்.

பந்தல்கண்ட் விரைவு சாலை, பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய ஊக்கம் தரும். இதனால் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இலவசங்கள்

இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கிற கலாசாரம், நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதைத் தொலைவில் வைக்க வேண்டும். இதில் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த இலவச கலாசாரம், ஒரு போதும் புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு தடங்களை உங்களுக்காக உருவாக்காது. இலவச கலாசார மக்கள், சாதாரண மனிதர்களுக்கு இலவசங்களை வழங்கி ஓட்டுகளை வாங்கிவிட முடியும் என நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தை ஒன்று சேர்ந்து தோற்கடிக்க வேண்டும். நாட்டின் அரசியலில் இருந்து இந்த இலவச கலாசாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்