சிறுத்தையை பிடிக்க 2 இரும்பு கூண்டுகள் வைப்பு

கொப்பாவில் தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 2 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-30 20:37 GMT

சிக்கமகளூரு:-

சிறுத்தை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுன் குணவந்தி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்தப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. அந்த சிறுத்தை, கிராமத்தில் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை வேட்ைடயாடி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் அந்தப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயத்தில் உள்ளனர். மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

2 கூண்டுகள் வைப்பு

அதன்பேரில் வனத்துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இதையடுத்து அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க மாநில அரசிடம் வனத்துறையினர் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு மாநில அரசும் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் குணவந்தி கிராமத்தில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து குணவந்தி கிராமத்தில் 2 இரும்பு கூண்டுகளை வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும் வனத்துறையினரும் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

வனத்துறை அதிகாரி எச்சரிக்கை

இந்த நிலையில், சிறுத்தையை பிடிக்கும் வரை விவசாயிகள் யாரும் தங்களின் விளைநிலங்களுக்கு செல்ல வேண்டாம். குழந்தைகள், பள்ளி மாணவர்களை வெளியே நடமாட விடாமல் பெற்றோர் எச்சரிக்கையுடன் பார்த்து கொள்ள வேண்டும். விரைவில் சிறுத்தையை பிடிப்போம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்