பெட்ரோல் பங்க் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு.!

ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்ததால் அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.

Update: 2023-05-29 05:43 GMT

ஆந்திரா,

ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள எண்ணெய் சேமிக்கும் தொட்டியை 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இன்று 3 பேர் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளனர். அப்போது தொட்டியில் முதலில் இறங்கிய நபர் கால் தவறி உள்ளே விழுந்துவிட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்களான இருவர், கிழே விழுந்த நபரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கினர். ஆனால் அவர்களும் உள்ளே விழுந்ததில் மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், மூவரையும் பெரும் போராட்டத்திற்கு பிறகு தொட்டியில் இருந்து மீட்டனர்.

அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்