புதிய வகை கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தும் மக்கள்

புதிய வகை கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அலட்சியப்படுத்திவிட்டு, பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால் மார்ஷல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-12-24 22:37 GMT

பெங்களூரு:

கொரோனா பாதிப்பு

சீனாவில் உள்ள ஆய்வகம் ஒன்றில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட தொடங்கியது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்குள் வந்தனர்களால் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது.

இதையடுத்து விமான சேவையை மத்திய அரசு தடை செய்தது. மேலும், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு, முககவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வெளியிட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர். கொரோனா பரவல் 3 அலைகளாக வந்து, மக்களின் உயிரை சுருட்டி சென்றது. கர்நாடகத்தில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊரடங்குகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு, சகஜ நிலைக்கு நாடு திரும்பியது. இதையடுத்து வழக்கம் போல் கூட்டங்கள், அரசியல் பிரசாரங்கள், கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி உள்ளிட்டவை நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது சீனாவில் உருமாறிய கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி விட்டது.

மந்திரி சுதாகர்

இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. மத்திய, மாநில சுகாதார மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைதொடர்ந்து பேசிய கர்நாடக சுகாதார துறை மந்திரி சுதாகர், உள்அரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகளில் கூட்டங்கள் நடத்தும்போது முககசவம் கட்டாயம் என கூறினார்.

மேலும், மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் வெளியிடப்படும் என்றார். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகள் சார்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முககவசம் கட்டாயம்

மேலும், பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி., மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து கழகங்கள் பயணத்தின்போது பயணிகள், டிரைவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பெங்களூருவில் பஸ்களில் பயணிப்பவர்கள் ஒருசிலர் மட்டுமே முககவசம் அணிந்து செல்கின்றனர்.

எனினும் பெரும்பாலானவர்கள் கொரோனா பரவலால் அச்சம் ஏதும் இன்றி வழக்கம்போல் முககவசம் இன்றி பயணம் செய்கின்றனர். பெங்களூருவில் மக்கள் முககவசம் அணிவதை கண்காணிக்க மீண்டும் மார்ஷல்களை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் மார்க்கெட் உள்ளிட்ட பொதுஇடங்களில் மார்ஷல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்