கோர்ட்டுகளில் நிலுவை வழக்குகள் 5 கோடியை நெருங்குகிறது - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-29 23:56 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

இம்மாதம் 1-ந் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25-ந் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது.

நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-

மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை.

இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

முதல் இடத்தில் அமெரிக்காவும் (80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு), இரண்டாம் இடத்தில் சீனாவும் (29 ஆயிரத்து 335 கோடி டாலர்), 3-வது இடத்தில் இந்தியாவும் (7 ஆயிரத்து 660 கோடி டாலர்) இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்