நாடாளுமன்ற ஜனநாயகத்தை பா.ஜ.க. புறக்கணித்துள்ளது - கேரள காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜனதா எம்.பி பர்டுகாரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார்.;
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 24-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜனதா எம்.பி பர்டுகாரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் 7 முறை எம்.பியாவார்.
மிக மூத்த உறுப்பினரையே தற்காலிக சபாநாயகராக நியமிப்பது நாடாளுமன்ற மரபாகும். அந்தவகையில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ், 8 முறை எம்.பியாக உள்ளார். எனவே அவரை நியமிக்காமல், 7 முறை எம்.பியான மஹ்தாப்பை நியமித்திருப்பதற்கு கே.சுரேஷ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தற்காலிக சபாநாயகர் நியமனம், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு முறை செய்தது போல், பா.ஜனதா நாடாளுமன்ற நடைமுறைகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அல்லது தனது சொந்த நலன்களுக்காக அவற்றைப் பயன்படுத்தும் என்பதை இது காட்டுகிறது' என குற்றம் சாட்டினார்.
முன்னதாக தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.