பண்ணை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

கே.ஆர்.பேட்டையில் பண்ணை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு. மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2023-02-09 21:01 GMT

மண்டியா:-

சிறுத்தை புகுந்தது

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அருகே உள்ளது மோடனஹள்ளி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தைகள் அடிக்கடி கிராமத்திற்குள் புகுந்து, ஆடு, மாடுகளை அடித்து கொன்று வருகின்றன. இந்த சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். வனத்துறையினரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்றை வனத்துறையினர் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் மோடனஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிங்கேவுடா என்ற விவசாயியின் பண்ணை வீட்டில் நடந்துள்ளது. நிங்கேவுடா தனது பண்ணை வீட்டின் அருகே தொழுவம் வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்தது. அந்த சிறுத்தை நிங்கேகவுடாவின் தொழுவத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஆடு ஒன்றை கடித்து குதறியது.

தம்பதி மீது தாக்குதல்

இந்த சத்தம் கேட்டு நிங்கே கவுடா மற்றும் அவரது மனைவி வெளியே ஓடி வந்தனர். அப்போது அவர்களை பார்த்த சிறுத்தை, 2 பேர் மீதும் பாய்ந்து, தாக்கியது. இதில் கணவன், மனைவிக்கு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சிறுத்தை அவர்கள் வீட்டிற்குள் புகுந்தது. இதை பார்த்த நிங்கேகவுடா, சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டினார். பின்னர் இது குறித்து அக்கம்

பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். அவர்கள் ஓடி வந்து சிறுத்தை பார்த்தனர். மேலும் சிறுத்தை வெளிேய செல்லாமல் பார்த்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த தம்பதியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுத்தை வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. விடிய விடிய இந்த பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

இதையடுத்து நேற்று காலை சிறுத்தை நிங்கேகவுடாவின் சமையல் அறைக்குள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை மீது மயக்க ஊசியை செலுத்தினர். இந்த மயக்க ஊசி சிறுத்தை மீது பாய்ந்தது. இதையடுத்து சிறுத்தை மயங்கி விழுந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்ற வனத்துறை அதிகாரிகள், வலை போட்டு சிறுத்தை பிடித்தனர். சிறுத்தை மயக்க நிலையில் இருந்ததால் யாருக்கும் எந்த தொந்தரவு இல்லை. இதையடுத்து அந்த சிறுத்தை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதற்கிடையில் சிறுத்தையின் நடமாட்டம் மற்றும் வனத்துறையினர் அதை பிடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்