ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் பின்னணியில் பாகிஸ்தான் போதை பொருள் கும்பல்

ரூ.350 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல் பின்னணியில் பாகிஸ்தான் போதை பொருள் கும்பல் செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

Update: 2022-10-10 08:46 GMT



புதுடெல்லி,


பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் கடத்தப்படுகிறது என்ற தகவலை தொடர்ந்து, இந்திய நுண்ணறிவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், உளவு தகவல் அடிப்படையில், ஈரான் நாட்டு படகு ஒன்றை கடந்த செப்டம்பர் இறுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில், இந்திய பாதுகாப்பு அமைப்பு சுற்றி வளைத்து பிடித்தது.

அதில், 200 கிலோ எடை கொண்ட, அதிக தரம் வாய்ந்த ஹெராயின் வகை போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. மாலத்தீவின் தலைநகர் மாலேவில் இருந்து தென்மேற்கே 500 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்படையிடம் பிடிபட்ட ஈரானிய கப்பலில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் பாகிஸ்தான் கடத்தல் கும்பல் பின்னணியில் செயல்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 8-ந்தேதி குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து நடத்திய சோதனையில் ரூ.350 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனுடன், பாகிஸ்தானிய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தலுக்கு பின்னணியில், பாகிஸ்தானை சேர்ந்த முகமது காதர் என்ற பெரிய போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

கடலின் நடுப்பகுதியிலேயே இந்த கடத்தல் பரிமாற்றங்கள் நடைபெற இருந்தது தடுக்கப்பட்டு உள்ளது என குஜராத் டி.ஜி.பி. ஆஷிஷ் பாட்டியா கூறியுள்ளார். இதனால், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய கடத்தல் கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

2022-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் நடுக்கடலில் 7 முறை போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளதுடன், இதுவரை 1,335 கிலோ ஹெராயினை கூட்டாக பறிமுதல் செய்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்