பத்ம பூஷண் விருது பெற்ற பெண்ணுரிமை சமூக போராளி எலா பட் காலமானார்
பத்ம பூஷண் விருது பெற்ற பெண்ணுரிமை சமூக போராளி மற்றும் வழக்கறிஞரான எலா பட் தனது 89 வயதில் காலமானார்.;
புதுடெல்லி,
நாட்டில் பொருளாதார ரீதியில் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக போராடிய பெண்ணுரிமை சமூக போராளி எலா பட். அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
பெண்களின் பொருளாதார நலன்களுக்காக இந்தியாவின் முதல் மகளிர் வங்கியான சேவா என்ற கூட்டுறவு வங்கியை 1973-ம் ஆண்டு தொடங்கினார். மகளிர் உலக வங்கியின் துணை நிறுவனராகவும் அவர் இருந்துள்ளார்.
அவருக்கு 1985-ம் ஆண்டில் நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருதும், 1986-ம் ஆண்டில் நாட்டின் 3-வது உயரிய பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.
தொழில் முனைவோராக பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்வதற்கான அவரது முயற்சிக்காக 2011-ம் ஆண்டு காந்தி அமைதி விருதும், சமூக தலைமைத்துவத்திற்காக 1977-ம் ஆண்டில் மகசேசே விருதும் அவர் பெற்றுள்ளார்.
தி எல்டர்ஸ் என்ற சர்வதேச என்.ஜி.ஓ. அமைப்பிலும் பணியாற்றி உள்ளார். இதில் இருந்தபடி, பாலின சமத்துவம், குழந்தை திருமணம் உள்ளிட்ட சமூக தீங்குகளை களைதல் போன்ற விசயங்களுக்காக பணியாற்றி உள்ளார். வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.
பெண்களை நிதி சார்ந்து கல்வியறிவு பெற்றவர்களாகவும் மற்றும் அதிகாரம் படைத்தவர்களாகவும் உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.