'எதிர்கட்சியினர் டெல்லியைப் பற்றி சிந்திக்க வேண்டும், உங்கள் கூட்டணி பற்றி அல்ல'- மக்களவையில் அமித்ஷா பேச்சு
அரசியலமைப்பில் டெல்லிக்கான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் விதிகள் உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
புதுடெல்லி,
மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று அவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிற்பகலில் அவை மீண்டும் கூடிய போது, டெல்லி அவசர சட்ட மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது;-
"டெல்லி அவசர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, இது சட்டத்திற்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு இந்த சபைக்கு இருக்கும் தகுதி குறித்து விரிவான அறிக்கை தருகிறேன்.
தலைநகர் டெல்லி தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்பில் டெல்லிக்கான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் விதிகள் உள்ளன.
டெல்லி தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்று சில தரப்பினர் கூறினர். ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் ஆகியோர் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கும் யோசனைக்கு எதிராக இருந்தனர். எதிர்கட்சியினர் டெல்லியைப் பற்றி சிந்திக்க வேண்டும், உங்கள் கூட்டணி பற்றி அல்ல" என்று அமித்ஷா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், "உங்களுக்கு தேவைப்படும்போது, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் உதவியை பெற்றுக் கொள்கிறீர்கள். உண்மையில் நேருவின் உதவியை நீங்கள் நாடியிருந்தால் இன்று மணிப்பூர், அரியானாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது" என்று கூறினார்.