நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான வியூகம்: காங். மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது சமையல் கியாஸ் விலை உயர்வை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய வியூகம் வகுப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார். சமையல் கியாஸ் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 12-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், இந்த தொடரில் பின்பற்ற வேண்டிய வியூகத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாடு சென்றுள்ளதால், ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பிறகு, மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறுகையில், ''சாதாரண மக்களை பாதிக்கும் சமையல் கியாஸ் விலை உயர்வு, இதர பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளை எழுப்ப உயர் முன்னுரிமை அளிப்போம். ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான 'அக்னிபத்' திட்டம் பற்றியும் பிரச்சினை எழுப்புவோம்'' என்றார்.
மேலும், வேலையில்லா திண்டாட்டம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நிலவரம் ஆகிய பிரச்சினைகளையும் எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனப்படைகளின் ஊடுருவல் குறித்து விவாதம் நடத்துமாறு காங்கிரஸ் கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி, சம்யுக்த கிசான் மோர்ச்சா போராட்டம் அறிவித்துள்ளது. அந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்குமாறு காங்கிரஸ் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.