பெங்களூருவில் 250 இந்திரா உணவகங்கள் திறப்பு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூருவில் 250 இந்திரா உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2023-06-12 18:45 GMT

பெங்களூரு:-

இந்திரா உணவகங்கள்

பெங்களூருவில் மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படும் இந்திரா உணவகங்களின் நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திரா உணவகங்களை மீண்டும் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பெங்களூருவில் இதுவரை இந்திரா உணவக செலவுகளை மாநில அரசு 30 சதவீதமும், மாநகராட்சி 70 சதவீதமும் ஏற்று வந்தன. ஆனால் தற்போது இந்த செலவுகளை கர்நாடக அரசு மற்றும் மாநகராட்சி சரிசமமாக தலா 50 சதவீதத்தை ஏற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உணவு பட்டியல் மாற்றம்

பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் மாநில அரசு 30 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகள் 70 சதவீதம் செலவுகளை ஏற்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிதாக எங்கெங்கு இந்திரா உணவகங்களை திறக்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்திரா உணவகங்களில் உணவு பட்டியலை மாற்ற முடிவு செய்துள்ளோம்.

மக்களுக்கு தரமான உணவு மற்றும் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். உணவுகளின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை. டெண்டர் பணிகள் முடிவடைந்த பிறகு இந்திரா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும். பெங்களூருவில் ஒரு வாா்டுக்கு ஒரு உணவகம் என்ற வீதத்தில் 250 இந்திரா உணவகங்களை திறக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்