காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு ராகுல் காந்தி மட்டுமே காரணம்.. நீக்கப்பட்ட தலைவர் பகீர் குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததற்காக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம் செய்திருந்தார்.

Update: 2024-03-10 10:56 GMT

சம்பல்:

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ரஜு கேதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்.

சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்று கூறிய காங்கிரஸ், இப்போது சாதியைப் பற்றி பேசுவதாகவும், கடந்த சில நாட்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்து அவர்கள் எடுத்த முடிவு கலக்கமடையச் செய்ததாகவும் பச்சோரி தெரிவித்தார். குறிப்பாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்த விதம் ஏமாற்றமளித்ததாக கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரசில் இருந்து சுரேஷ் பச்சோரி வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆச்சார்யா, "காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு காரணமான ஒரே நபர் ராகுல் காந்திதான். அவர் கட்சியில் இருக்கும் வரை யாராலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது" என்றார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததற்காக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணமும் விமர்சனம் செய்திருந்தார். அத்துடன், ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடந்த விழாவில் அவர் கலந்துகொண்டார். அதன்பின்னர், அவர் காங்கிரசில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்