பிபின் ராவத் மறைந்து ஓராண்டு நிறைவு; டெல்லி தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், டெல்லி தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update:2022-12-08 19:05 IST



புதுடெல்லி,


நீலகிரி மாவட்டம் குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சி கல்லுாரி உள்ளது. இதில் நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமான படை தளத்தில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி காலை 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இன்றுடன், அவர்கள் உயிரிழந்து ஓராண்டு நிறைவடைகிறது.

இந்த நிலையில், முப்படைகளின் முதல் தளபதியான பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிரிகேடியர் எல்.எஸ். லிட்டர் உள்ளிட்டோர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கு டெல்லி தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மறைந்த லிட்டரின் மனைவி கீதிகா லிட்டர் கலந்து கொண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைத்து அதிகாரிகளுக்காகவும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அதற்காக வைக்கப்பட்டு இருந்த குறிப்பேட்டில் தனது வருகையையும் பதிவு செய்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் 27-வது தலைமை தளபதியாக டிசம்பர் 31, 2016 முதல் பொறுப்பேற்றார். பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடையும் அன்று முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.

முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதல் நபராக பிபின் ராவத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்