காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

Update: 2023-02-28 03:52 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். புல்வாமா மாவட்டம் அவந்திபுரா நகரில் பட்கம்புரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த மோதலின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

என்கவுண்டர் நடந்த இடத்தில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுகிழமை புல்வாமா மாவட்டம் அச்சென் பகுதியில் இந்து மதத்தை சேர்ந்த காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா (வயது 40) பட்டப்பகலில் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்