'ஒரே நாடு ஒரே தேர்தல்' - எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2024-10-10 10:42 GMT

திருவனந்தபுரம்,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம், மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இதில் மக்களவை - சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கேரள சட்டசபையில் முதல் மந்திரி பினராயி விஜயன் சார்பில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி எம்.பி. ராஜேஷ் தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது;

"கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும். இந்த திட்டம், நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.

முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு மக்களின் ஆணையை மீறுவதாகவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சவால் விடுவதாகவும் உள்ளது.

மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரு செலவாக கமிட்டி பார்க்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் செலவுகளைக் குறைப்பதற்கும், நிர்வாகத்தை திறம்படச் செய்வதற்கும் வேறு எளிய வழிகள் இருப்பதால் இது கண்டனத்திற்குரிய நடவடிக்கை." என்றார். 

இதனை தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்