41 தொழிலாளர்களும் இயல்பாகவே இருக்கிறார்கள் - ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி

அவர்களின் ரத்தக்கொதிப்பும் ஆக்சிஜன் அளவும் நன்றாக இருக்கிறது.

Update: 2023-11-29 12:49 GMT

ரிஷிகேஷ்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்காலிக மருத்துவ முகாமில் 41 தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், எய்ம்ஸில் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனைக்காக இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்தநிலையில், 41 தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மீனு சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

41 தொழிலாளர்களும் நன்றாகவே இருக்கிறார்கள். அவர்களை நோயாளிகள் என்றுகூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இயல்பாகவே இருக்கிறார்கள். அவர்களின் ரத்தக்கொதிப்பும் ஆக்சிஜன் அளவும் நன்றாக இருக்கிறது. சில அடிப்படையான மருத்துவ சோதனைகள் மட்டும் நாங்கள் செய்தோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்